எட்டு(ம்) இடத்தில் ஜெய்

வாங்க எட்டு போட்டு விளையாடலாம்ன்னு முதல்ல சர்வேசன் போட்டாரு ஒரு கமெண்ட், ஓ.கே ரெடி பண்ணுவோம்ன்னு நினைத்துக்கொண்டுயிருக்கையில் நம்ம வெங்கட்ராமன் வேற கெளபிட்டாரு... இப்படியே விட்டா பல எட்டு போட வேண்டியிருக்கும் பயமாயிட்டதால முதலில் நம்ம பதிவை போட்டுவிட்டு அடுத்த வேலையை பார்ப்போம்ன்னு எறங்கிட்டோமில்ல...

என்னைப்பற்றி ஏற்கனவே பல தடவை மொக்கை போட்டதால ... உங்களுக்கு தெரியாத சில (எட்டு) விசயத்தை சொல்லாம்ன்னு நினைக்கிறேன்...

இந்த எட்டு என்னை ரொம்பவே பாடா படுத்தியும் இருக்கு, உதவியும் இருக்கு பல விசயங்களில், அதில் சில எட்டுக்களை மட்டும் எடுத்து போடுவோம்ன்னு ஒரு முயற்சி... ஓவரா இருந்த அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க... ஹீ! ஹீ!!

1. நான் ஏழாவது பாஸ் பண்ணதும், எங்க வீட்டை கோவை-பீளமேடு பகுதியிலிருந்து கோவை-ராமநாதபுரம் பகுதிக்கு மாற்றிப்போனோம்! அதனால இங்க இருந்து முன்பு படித்த GRG Matriculation பள்ளிக்கு செல்வது சுலபம் அல்ல என்ற காரணத்தால் என்னை CSI Union Higher Secondary தள்ளிவிட்டுட்டாங்க, முதலில் ரொம்ப நொந்து நூலா போனேன்! புது நண்பர்கள், புது ஏரியா, புது மக்கள்... நம்ம சென்னை 600028 மாதிரி கிரிக்கெட் விளையாடுவதிலிருந்து பழைய நண்பர்கள் பார்ப்பதுவரை. அந்த கால கட்டத்தில் வீட்டில் போன் என்ற மேட்டரே பெரிய விசயம், எங்க வீட்டில் போன் இல்லை. அப்படியே அந்த நண்பர்களின் தொடர்ப்புகள் எல்லாம் காற்றோட போச்சு! இன்று தேடிப்பிடித்து தொடர்பில் உள்ளவர்கள் ஒரு சிலர் மட்டுமே! இப்படி முதலில் என்னை புரட்டிய 8 என்னுடைய 8வது வகுப்பு.

2. பள்ளிப்படிப்பின் போது ரொம்ப நல்லபுள்ளயா இருந்த நான், என் பொறியியல் படிப்பை (7 + 1) 8 ஆண்டுகளில் படித்து பாஸ் ஆனால் போதும் என்ற லெவலில் கல்லூரியில் ஆட்டம் போட்டேன் பாருங்க, எங்க அப்பா ஆடிப்போயிட்டாரு! முதல் வருடமே, வாரம் ஒரு பிரச்சனைக்காக எங்க கல்லூரிக்கு வரும் நிலைமைக்கு எங்க அப்பாவை கொண்டுவந்துவிட்டேன் (அதுவும் கோவையிலிருந்து சென்னைக்கு வாரம் ஒரு முறை ஓவர் தானே!!!). அப்புறம் எனக்கே எங்க அப்பாவை பார்த்தா பாவமா இருக்குன்னு ரெண்டாவது வருஷம் முதல் லோக்கலா ஒரு கார்டியனை நானா ரெடி பண்ணிக்கிட்டேன். இப்படி பண்ணதோட விணை ப்ளஸ் கல்லூரியில் நடத்திய ஒரு ஸ்ரைக் காரணமாக என்னுடைய 8வது செமிஸ்டர் முழுவதும் என்னை கல்லூரிக்குள் வரக்கூடாது, நேரா எச்சாம் (லக்கி ஸ்டைல்) வந்து எழுதிட்டு பொழச்சு போன்னு தண்டனை கொடுத்தாங்க. அப்படி 8வது செமிஸ்டரும் என்னை ரொம்ப நோகடித்த விசயம் தான். பின்ன என்னங்க ப்ராஜக்ட் முதல் எலக்ட்டீவ்ஸ் வரை எல்லா விசயங்களும் சொந்தமா நாமலே படிச்சு, கைடு கூட இல்லாம, நம்ம கூட கல்லூரிக்கு வராதேன்னு சொன்ன ரெண்டு சொத்தை பார்ட்டிங்களை வைத்து ப்ராஜெக்ட்டும் செய்து பாஸ்சானது ஒரு சாதணைதானே ;)

3. கல்லூரியில் முதல் வருடமே பைக் கனவு வீட்டில ஒரு எமாஹா கேட்டேன், அதை ஓட்டும் அளவுக்கு உனக்கு கெப்பாசிட்டி இல்லைன்னு எங்க அப்பா எனக்கு வாங்கி தந்தாரு பாருங்க ஒரு பைக், நொந்து நூலா போனேன்! என்னைக்கேட்காமலே போய் ஒரு டி.வி.எஸ் சாம்ப் என்னும் மோப்பட் வாங்கிட்டு வந்து இதை ஓட்டு, அப்ப தான் நான் கோவையில் பயம் இல்லாம இருக்க முடியும்ன்னு என் எமாஹா கனவை சுக்கு நூறு ஆக்கிட்டு போயிட்டாரு எங்க அப்பா... இதை ஏன் சொல்லவறேன்னா !! அந்த வண்டி எண் கூட்டுத்தொகை எட்டு!!!! முதல் வருடம் முழுவது செலவு வைத்துக்கொண்டே இருந்தது, நம்ம பைக் (கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க!) மெக்கானிக் அடிக்கடி சொல்லுவாரு எட்டா நம்பர் வண்டி இப்படித்தான் செலவு வைக்கும்ன்னு!

4. கல்லூரி படிப்பு முடித்த கையோட சொந்த ஊரான கோவையை நோக்கி பயனமானேன். படித்தது மெக்கானிக்கல், இரண்டாம் ஆண்டு முதல் கம்பூட்டர் மேல் ஒரு பாசம் பொங்க, நானும் படித்தேன் 3 ஆண்டுகள் ஸாப்ட்வேர் கோர்ஸ் என்.ஐ.ஐ.டியில். 1995ல் கோவையில் எங்க போய் ஸாப்வேர் வேலை கிடைக்கும், சரி விடு அது எனக்கில்லைன்னு மெக்கானிக்கல் சம்பந்தமாக ஒரு வேலையை பிடித்தேன். முதல்மாதம் சம்பளம் வெறும் ரூ1850/- அதை கையில் வாங்கி அப்படியே அம்மா கிட்ட கொடுத்து ஒரு ஆசீர்வாத வாங்கிவிட்டு, அப்படியே ஒரு பிட்டு விட்டேன், இதே வேலைக்கு பதிலா சென்னையில் சாப்ட்வேர் வேலை செய்தால் எனக்கு நிறைய சம்பளம் கிடைத்திருக்கும், இங்க வந்து என் வாழ்க்கை வீணா போகுதுன்னு! நீ எங்க கூடயே இருன்னு அவங்க வேற மாதிரி பிட்டு போட்டு அடக்கிட்டாங்க. அடுத்த மாதம் சம்பளம் வாங்கி அம்மா கிட்ட கொடுத்து சென்னைக்கு போகலாம்ன்னு நினைக்கிறேன்னு, வேற ஒரு லைன்னில் சொல்ல சரி ஒழிந்து போன்னு போக சொல்லிட்டாங்க. பெரிய ஸீன் போட்டு ரெயில் டிக்கெட் போக வெறும் ரூ 800/- கையில் எடுத்துக்கிட்டு கனவுகள் ஆயிரத்தை எடுத்துக்கிட்டு வந்தேன் சென்னைக்கு... இன்றும் வாழ்க்கையில் மறக்க முடியாத அந்த எட்டு நூறு ரூபாய்கள். அடிக்கடி ரூபாய் எட்டு நூறுடன் வந்து இந்த நிலையை அடைந்ததில் நினைத்து சந்தோஷப்பட்டுக்குவேன்.

5. 1998ல் சொந்த கம்பெனி துவக்கமும் அளவுக்கு அடிப்படை பக்குவம் கிடைத்ததா இல்லையான்னு இன்றும் புரியவில்லை. ஏதோ ஒரு வேகத்தில் சொந்தமா ஒரு மென்பொறி நிறுவனம் துக்கியாக வேண்டிய கட்டாயம் குமுதம் வார இதழ் ரஞ்சன் சார் மூலம் எனக்கு கிடைத்தது! அவர்களுடைய இணைய தளம் துவக்க, நான் வேலை செய்த கம்பெனிக்கு ஆர்டர் எடுத்தோம், அந்த கம்பெனிக்கு ஒரு நல்ல காலம், இழுத்து மூட வேண்டிய கட்டாயம், நம்ம சொன்ன டெக்னிகல் விசங்களால் கவரப்பட்ட ரஞ்சன், ஜெய் உங்களை நம்பித்தான் இந்த ஆர்டரை கொடுத்தோம், நீங்களே ஏதாவது செய்து குமுதம்.நெட் வெளிவர செய்யனும்ன்னு அன்பு கட்டளையிட்டார்கள். என் கல்லூரி நண்பர்கள் சிவஞானம் & சிவ அமுதன் துணையுடன் கம்பெனி ரெடி ;) இதுல என்ன எட்டுன்னு கேட்கறீங்களா, முடிவு எடுத்த எட்டாவது நாளில் 120 ச.அடியில் ஒரு ஆப்பீஸ் ரெடி, அடுத்த எட்டவது நாள் ஆகஸ்ட் 15ஆம் தேதி நான் மற்றும் ஒரே ஒரு சாப்ட்வேர் இன்ஜினியர், இருவரும் சேர்ந்து இரவு பகலாக வேலை செய்து குமுதம்.நெட் வெப்சைட் அமெரிக்க வெப் சர்வரில் மிதக்க செய்தோம். அன்று இது ஒரு இமாலய சாதனையாய் நினைத்துக் கொண்டேன்.

6. 1999ல் முதல் வெளி நாட்டு ஆடர் கிடைத்தது, பெரிய ஆடர் இல்லை சின்னதா தான் $2879 கூட்டுத்தொகை எட்டு. நான் நிஜமாவே நமக்கு ராசி நம்பர் எட்டு என்று நினைக்கவைத்த நேரம் அது! படிப்படியா நிறைய வெளிநாட்டு ஆடர்கள்! எல்லா ஆடர்களிலும் விலையை சொல்லும் போது கூட்டுத்தொகை எட்டு இருக்கவேண்டும் என்று முடிவு, அப்படி செய்யும் எல்லா ஆடர்களும் கையில் பிரச்சனையில்லாமல் கிடைத்தது! ஆச்சர்யமாக இருந்தது!!! அது ஒரு பொற்காலம் தான்!

7. இரண்டாயிரம் ஆண்டு நமக்கு சனி பகவான் எட்டாம் இடத்துக்கு வந்தாரு போல, குமுதம் வெப்சைட் பல பிச்சனைகளால் கோர்ட் கேஸ் என்று என்னை நோகடிக்க செய்தது, கம்பெனிக்கு வந்து கொண்டிருந்த வெளிநாட்டு ஆடர்கள் Software Recession காரணமாக முற்றிலுமாக நின்றது :( , இதயம் நல்லெண்ணை, இந்தியா டூரிஸம் போன்ற உள்நாடு ஆடர்கள் மட்டும் கை கொடுத்த காலம் அது! அந்த இக்கட்டான நேரத்தில், உள்ளது போதாது என்று என்னுடைய கம்பெனி கூட்டணி ஆட்டம் கண்டது 2001ல்! சேமிப்புகள் முழுவது கம்பெனியில் முதலீடு ஆன நேரம் அது! என் கம்பெனியில் நானாக சேர்த்த 3 இயக்குனர்கள் கூட்டணி போட்டு, என்னை வெளியேற்றி, என் நிறுவனத்தை முழுவதுமாக அவர்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டு சென்றனர், இதில் கொடுமை என்ன வென்றால் அவர்களுக்கு தலைமை தாங்கிய ஒரு இயக்குனர் என் உற்ற நண்பன் என்பதே! உருவாக்கிய கோட்டையை விட்டு வெளியேறி, என் பங்குக்கான தொகையில் பாதி கூட கிடைக்காமல், வெறும் 2 லட்சங்களுடன் உயரத்திலிருந்து தரையில் விழுந்து, புதிதாய் ஒரு நிறுவனம் துவக்கி என்னை கரையேற்ற மீண்டும் என் நண்பர்கள் சிவஞானம், சிவ அமுதன் வந்தார்கள் உறுதுணையாக, வாழ்க்கையில் என் ஒவ்வொறு வீழ்ச்சியின் போதும் துணை நின்றவர்கள் இவர்களே! ஆக என்னை உயர்த்திய எட்டு 2000 ஆண்டு முதல் 2003 ஆண்டு வரை ரவுண்டு கட்டி பரேடு எடுத்தார். இப்படி எட்டில் சனி என்னை வதைக்க துவக்கிய காலம் அது!

2004 முதல் மீண்டும் நம்ம எட்டு எனக்கு வேலை செய்ய துவங்கினார், முதல் வெளிநாட்டு ஆடர் அதே கூட்டுத்தொகை எட்டு! அன்று துவங்கி இன்றுவரை பல படிகள் ஏறி இன்று ஓரளவுக்கு சின்னதா ஒரு சாப்வேர் கம்பெனியும், என்னை நம்பி சில சப்வேர் இன்ஜினியர்களும், சீராக தொழில் வளர்ச்சிக்கு ஆதரவு தரும் வாடிக்கையாளர்களையும் உருவாக்கிவைத்துள்ளது சாதனையா இல்லையான்னு தெரியாது, என்னை பொருத்தவரை நான் எனக்கென ஒரு நிலையை தயார் செய்துவிட்டேன்! நேர்த்தியா பயணித்தும் வருகிறேன்! இப்படி என்னை வாட்டிய, வளர்த்த, வளர்த்துக்கொண்டிருக்கும் என நினைத்துக் கொண்டிருக்கும் ராசி எண் எட்டு!!!அட நியூமராலஜி படி என் ராசி எண் ஐந்தாம்??!!! என்ன லிங் என்று புரியவில்லை!!!

8. இந்த மேட்டர் என் வாழ்க்கையின் ஒரு திருப்புமுனை, ஆனா இதுக்கும் எட்டுக்கும் சம்பந்தம் இல்லை, அதனால தான் எட்டவது பாய்ண்டா போட்டுவிடுவோம்ன்னு முடிவு செய்தேன். நான் கல்லூரியில் படிக்கும் போது என் அக்கா கணவர் என்னை பார்த்து என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்று ஒரு கேள்வி கேட்டார், நான் பெருமையா இன்ஜினீரிங் படித்துக் கொண்டிருக்கிறேன் என்றேன்! படித்து முடித்து என்ன செய்ய போகிறாய் என்று கேட்டார், நான் சாப்ட்வேர் Parallelல படித்து வருகிறேன்! கல்லூரி படிப்பு முடித்து சில வருடங்கள் சாப்ட்வேர் வேலை செய்து, அனுபவம் கிடைத்தவுடன் வெளிநாடு செல்வேன் என்று சொன்னேன்! அவர் Amul(Gujarat Cooperative Milk Marketing Federation) என்ற இந்தியாவின் மிக சிறந்த Cooperativeவில் ஒரு உயர் அதிகாரியா இருக்கரு... அவர் என் பதிலை எதிர்ப்பார்த்திருப்பார் என்று நினைக்கிறேன், உடனே என்னிடம் உங்களை போன்ற படித்தவுடன், வெளிநாடு செல்ல தயார் செய்யும் இளைஞர்களால் இந்தியாவுக்கு என்ன லாபம்! நீங்க செய்வது Brain Drain, இதனால் இந்தியாவுக்கு சில நன்மைகள் இருக்கலாம், உங்களுக்கு பல நன்மைகள் இருக்கலாம், ஆனா, நீங்கயெல்லாம் இந்தியாவில் இருந்தால் இந்தியா ஒளிர உதவியா இருக்கும் என்று சொன்னார், அது என்னை புரட்டி போட்ட அறிவுரை! என் ஒருவனால் ஒன்றும் செய்ய முடியாது என்று தெரியும், இருந்தாலும் , அவர் சொல்லும் வாதம் சரி என்று தோன்றியது, நம்மளவில் இதை செயல்படுத்துவோம்ன்னு அன்று இரவே முடிவெடுத்தேன்! நான் இந்தியாவில் தான் வேலையானாலும், தொழிலானாலும் செய்ய வேண்டும் என்று தீர்கமான முடிவு! இந்தியாவுக்கு ஒரு அணில் அளவுக்குகூட இல்லை என்றாலும் பாலம் கட்ட உதவி என்ற நிலையில்!!! இன்று என்னால் சில லட்சம் டாலர்களாக வெளிநாட்டு பணத்தை இந்தியாவுக்குள் கொண்டுவர முடிந்ததது என்ற சந்தோஷம் இருக்கு!

பி.கு: கல்லூரியில் என வகுப்பில் படித்த 63 பேரில் இன்று இந்தியாவில் இருப்பது வெறும் பத்து பேர் தான்!!!!

சரி ஓவராயிடுச்சு நம்ம மேட்டர்கள்!

இனி எட்டு பேரை கூப்பிடனுமா!!!

கீழே உள்ள சாமிகளா ஓடி வந்து எட்டு போட்டு, லிங் கொடுங்க....



  1. சொந்த கதை மன்னன் - அருள்குமார்

  2. பா.ம.க ராசா - குழலி

  3. எங்க பா.க.ச தல - பாலாபாய்

  4. எங்க சங்கத்து பெண் சிங்கம் - பொன்ஸ்

  5. என்னை கவர்ந்த வலைப்பதிவர் பத்ரி

  6. எல்லா பதிவிலும் என்னை ரவுண்டு கட்டி அடிக்கடி அடிக்கும் அசுரன்

  7. என்னை காந்தியவாதி ஆக்கியே தீருவேன்னு துடிக்கு அன்பு மா சிவகுமார்

  8. வலையுலக க்ரிடிக் Boston Bala

விளையாட்டின் விதிகள்:

1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும், அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.

2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.

3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்

Comments

ரொம்ப நல்லா இருக்கு உங்க 8 விஷயங்கள்.

உங்களைப் பற்றி தெரிந்து கொள்ள வைத்த இந்த 8 ஆட்டம் ஆரம்பிச்சு வச்ச அண்ணாச்சிக்கு நன்றி.
//பாஸ்சானது ஒரு சாதணைதானே ;)
//

ஆதாரம் இருக்கா?

//சொந்த கதை மன்னன்//

இதென்னங்க புதுக்கதையா இருக்கு?!
Boston Bala said…
ஜெய்... என்னுடைய எட்டு :)
Eight Random Facts Meme « Snap Judgment
அசத்திட்டீங்க .... தலைவரே !

மத்த எட்டு மாதிரி இல்லாம ... சாதனை எட்டாகவே ... பார்க்க முடிந்தது ...

மேலும் சாதிக்க... வாழ்த்துக்கள் !
We The People said…
////பாஸ்சானது ஒரு சாதணைதானே ;)
//

ஆதாரம் இருக்கா?//

என்ன வில்லத்தனம்! அ.க.சகிட்ட சொல்லிடுவேன் ஜாக்கிரதை!
ilavanji said…
ஜெய்,

இயல்பான எட்டு!

படிப்புக்கும் செய்கிற வேலைக்கும் சம்பாதியத்துக்கும் சம்பந்தமில்லைன்னு சொல்லறது உண்மைதான் போல. தொழிலில் உங்களது கடின உழைப்பும் வெற்றியும் படிக்க சந்தோசமா இருக்கு :)
We The People said…
வெங்கட், அருள், சர்வேசன்,பாபா, சுந்தர், இளவஞ்சி பின்னூட்டங்களுக்கு நன்றி.

//படிப்புக்கும் செய்கிற வேலைக்கும் சம்பாதியத்துக்கும் சம்பந்தமில்லைன்னு சொல்லறது உண்மைதான் போல. தொழிலில் உங்களது கடின உழைப்பும் வெற்றியும் படிக்க சந்தோசமா இருக்கு :)//

இளவஞ்சி 100% உண்மை. என் பட்டப்படிப்பு சில மாதங்கள் மட்டுமே உபயோகமாக இருந்தது! இருந்தாலும் சில நேரம் படிப்பில் கிடைத்த சில விசயங்கள் இந்த தொழிலிலும் தேவைப்படுது!!
போட்டுட்டம்பா.. இங்க
Anonymous said…
your 8th point was superp.. you have taken a good decision... i salute you.

dhanraj