சிங்கை பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி இணையதளம் நடத்தும் மாபெரும் கருத்தாய்வு போட்டி இன்றைக்கு பதிவுலகுக்கு வெளியே பதிவுலகைப் பற்றி இருக்கும் ஒரு மறைமுக அறைகூவல், பதிவர்கள் எனப்படும் இணைய எழுத்தாளர்களால் ஆக்கப்பூர்வமாக எதுவும் எழுத முடியுமா என்பதே. முன்னோடி எழுத்தாளர்கள் முதல் பொதுத்தள ஊடகங்கள் வரை இந்தக் கேள்வியை மறைமுகமாக கேட்டுவருகின்றனர் மேலும் பதிவர்களின் எழுத்துத் திறன் பற்றி பொதுமக்களிடம் பேசத் தயங்குகின்றனர்.அது தவிர பொதுமக்களிடையே பதிவுலகம் பற்றிய அறிமுகங்கள் இல்லாததற்கு முதன்மைக் காரணி கணினி மற்றும் இணைய இணைப்பு அனைவரிடம் இல்லை என்பதே. இவை வெளிப்படையான காரணங்கள் என்றாலும், இணையத்தில் எழுதுகிறேன், இணைய நண்பர்கள் இருக்கிறார்கள் என்று பிறரிடம் சொன்னால் அவர்கள் உடனடியாக ஐஆர்சி எனப்படும் இணைய உரையாடியில் வெட்டிப் பேச்சு பேசுவரோ என்றே நினைக்கிறார்கள். இணையத்தில் மிகப் பெரிய அளவிலான கருத்தாய்வுகள், விவாதங்கள் நடந்து வருவதும் வெளியில் பலருக்கும் தெரியவில்லை. இணையத்தில் வெளியிடப் பட்டக் கட்டுரைகள் இவை என்று பொதுமக்கள் முன்பு அத்தகைய ஆக்கங்களைக் கொண்டு செல்லும் முயற்சி பெரிய அளவில் மேற்கொள...