தினமலரில் We The People பதிவு!!!

இன்றைய தினமலர் நாளிதலில் நம்ம பதிவான பெட்ரோல் விலையும்... மானியம் என்னும் மாயையும் ஒரு வரி விடாம "இது உங்கள் இடம்"ன்னு ஒரு பகுதியில் அச்சு ஆயிருக்கு. முதலில் நன்றியை சொல்லுவோம் தினமலர்க்கு. இது பலரை சென்று அடையும் என்று சந்தோஷப்படுவோம். என் 3 மாத பெட்ரோல் விலை பற்றிய ஆராய்ச்சி (ofcourse in my spare time) மக்களுக்கு சென்று அடைந்ததில் மிக்க மகிழ்ச்சி! மற்றும் அரசின் முகமூடியும் கிழிக்கப்பட ஒரு முயற்சி வெற்றி பெற்றதில் ஒரு பெருமிதம்!!!

Link to the dinamalar page:

நேரடி மின்முகவரி:

www.dinamalar.com/2006june29/ithu.asp

தினமலரின் மின்முகவரி: http://www.dinamalar.com அதில் "இது உங்கள் இடம்" என்ற ஒரு Link உள்ளது. அதில் வந்துள்ளது.


பி.கு: என் பெயர் மாற்றப்பட்டுள்ளது (எம்.ஜெயகுமார் என்று) இது சின்ன அச்சு பிழையா? அல்லது தினமலர் என் நலம் விரும்பி மாற்றி பதித்தா என்று தெரியவில்லை (ஆட்டோ நன்பர்களிடம் இருந்து என்னை காப்பாற்ற!) . மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன் பதில் வந்தால் பார்ப்போம்!!!

ஒரு இந்திய கனவு

என் நீண்ட நாள் கனவு... அனேகமாக ஒவ்வொறு தமிழனுக்கும் ஏன் ஒவ்வொறு இந்தியனுக்கும் இந்த கனவு இருக்கும்...

இந்த கனவுக்கு base ஷங்கரின் "முதல்வன்" .... நம்மை ஆள்வதற்கு ஒரு புகழேந்தி வரமாட்டானா? நான் சொல்ல வந்தது முதல்வனில் வரும் நாயகன் புகழேந்தி ... தப்பா நினைத்துகொள்ள வேண்டாம் ... யாரையும் மனதில் புகழேந்தியாக வைத்திருக்கவில்லை... இங்கு இருக்கும் யாரும் அந்த அளவுக்கு மக்களை நினைப்பவர்களில்லை... இது என் மனதில் தோன்றியது...

அவன் வருவானா?
ஊழல் இல்லாதவன், ஊழல் பிடிக்காத தலைவன், ஊழல் கறைபடியாதவன், ஒரு நல்ல முதல்வன் ... ஒரு நல்ல பிரதமர் .... ஒரு மக்கள் தலைவன்...
என்று தனியும் இந்த தேடல்!!!!

நாம் ஏமாந்துவிட்டோம் !!! நாம் ஏமாற்றப்பட்டுவிட்டோம்!!!

இவர்களை தெரிந்துகொள்ள தவறிவிட்டோம்.. தன்னிகர் அற்ற தலைவர்களை விட்டுவிட்டு .... இப்போது தலைமகனை தேடி அலைகிறோம்...

கக்கன் - மந்திரியாக இருந்தும் ... ஓலை குடிசையில் வாழ்ந்து... ஓலை குடிசையில் இறந்தார்... இந்த வரலாறு தெரிந்தவர்கள் சிலரே...

அவரை போல் ... காமராஜர் ... பக்தவச்சலம்... என்று பலர்... அவர்களை அரசியலிருந்து... மக்கள் சேவைலிருந்து வெளியேற்றினார்கள் இன்றைய அரசியல் கொள்ளையர்கள்... சுயநலத்துக்காக...

நாடுக்காக உயிர் தியாகம் செய்த பலரை நமக்கு தெரியாமல் செய்துவிட்டார்கள்...

திவிரவாதி பட்டம் கட்டப்பட்ட சிலர்:

1. சுபாஷ் சந்திர போஸ் - இந்திய தேசத்துக்குகாக முதல் ராணுவம் உருவாகியவர்... இவர் உயிரோடு இருக்கிறாரா என்பதே ஒரு சர்ச்சை !!! எப்படி வாழ்தார்? எப்படி ராணுவம் உருவாகினார்? சுதந்திரத்துக்கு முன் இருந்த காங்கிரஸில் இவர் பங்கு? யாருக்கும் தெரிய வாய்ப்பு இல்லை...

2. பகத் சிங் - சிறு வயதில் நாடுக்காக உயிர் தியாகம் செய்தார் ... காந்தி ஒரு வாக்கு சொல்லியிருந்தால்... இவரை தூக்கிலிட்டிருக்க மாட்டார்கள் என்ற கூற்றில் எனக்கும் உடன்பாடு உண்டு ... மிதவாதிகளால் கொல்லப்பட்டவர் ...

3. வா.உ.சிதம்பரம் - நாடுக்காக தன் சொத்தை விற்று கப்பல் வாங்கி, அது ஆங்கிலேயர்களால் அழிக்க பட்டு, சொத்தை இழந்து... ஓட்டை காலனா கூட இல்லாமல் இறந்தார்...
இவர்களை நாம் அடையாளம் காணவில்லை... காட்டப்படவில்லை... அவர்களின் வரலாறு சென்சாருக்கு உள்ளாகியிருக்கு... இது போன்ற உண்மையான தியாகிகள் அடையாளம் காட்டப்படவில்லை... அவர்களின் வரலாறுக்கு திரையிட்டது யார்? ஏன்? அதனால் யாருக்கு லாபம்?
இப்படி பலரை இழந்துவிட்டோம்... அது நேற்று!!!
நாம் சிந்திக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது...
இன்றும் மக்களுக்காக உழைக்க வருபவர்கள் மீது திரையிட முயற்சிப்பார்கள்... இன்று மக்களுக்காக முன் வந்திருக்கும் எனக்கு தெரிந்த சிலர்...
டாக்டர் M.S.உதயமூர்த்தி இன்று என்ன செய்கிறார்? மக்கள் சக்தி இயக்கம் என்ற ஒரு மக்கள் இயக்கம் நடத்துகிறார்... 60 கிராமங்களை தத்தெடுத்து அதன் வளர்ச்சிக்காக உழைக்கிறார்!!! அவர் ஒரு அமைதி புரட்சியை உருவாக்குவது போல் தோன்றுகிறது!!!
ஐ.ஐ.டி மாணவர்களின் கட்சி லோக் பரித்ரான் இவர்கள் ஐ.ஐ.டி மாணவர்கள்... பெரும்பாலும் வெளிநாடுகளில் வேலை செய்தவர்கள்... சுயநலம் விட்டுவிட்டு மக்கள் சேவைக்கு வந்திருக்கிறார்கள்....
இன்னும் பலர் வரக்கூடும்.... இதில் மக்கள் தலைவன் உள்ளான என்று தேடுவோம்... இன்றாய அரசியல் கொள்ளையர்களை துரத்தியடிப்போம்... நல்லவர்களை தேர்ந்தெடுத்து ஆட்சியில் அமர்த்துவோம்...
நான் புகழேந்தியை தேட துவங்கிவிட்டேன்!!! நீங்க்ள்???

இது எப்படி இருக்கு!

ஆனாலும் ரொம்ப குசும்புங்க இந்த லாலு பிரசாத் மச்சானுகளுக்கு.

சூன் 19, 2006:

ஒரு மச்சான் (சுபாஷ் யாதவ், MP) பாட்னா ரெயில் நிலையத்தின் பிளாட்பாரம் #1 இருந்துகினு மூன்றாவது பிளாட்பாரதில் வந்த ரெயில் வண்டிய ஓட்டிகினு வா இங்கன்னு கட்டளை வுட்டிருக்காரு! உடனே ரெயில்வே அமைச்சரின் மச்சானாச்சே உடனே ரெயில்வே அதிகாரிகளும் பறந்து அடிச்சுகினு பிளாட்பாரம் #1 வண்டிய ஓட்டி வந்திருக்காங்க.

சூன் 20, 2006:

விடுவார அடுத்த மச்சான் (சாது யாதவ், MP) (யாரு வெயிட்டுனு காட்ட வேண்டாம்!!!) அதே பாட்னா ரெயில் நிலையத்தின் முதல் பிளாட்பாரம் போயி நின்னுகினு, இரண்டாவது பிளாட்பாரதில் வர வேண்டிய ரெயில் வண்டிய முதல் பிளாட்பாரத்துக்கு ஓட்டிக்கின்னு வா சொல்லியிருக்காரு தலிவரு, எதோ ஒரு லொல்லு புடிச்ச ரெயில்வே அதிகாரி அதெல்லாம் முடியாதுன்னு சொன்னாரு போல,

சாதுவின் சூப்பர் டயலாக் " அந்த மச்சானுக்கு வரும் வண்டி, ஏன் எனக்கும் வர கூடாது " நியாயமான கேள்விதான?

சுமார் ஒரு மணி நேரம் ரெயில் நிலையத்தை உண்டு இல்லைன்னு பண்ணியிருக்காரு நம்ம சாது! (யாதவ்!) இதில் ஒரு தொண்டர்கள் தர்ணாவும் அடங்கும்போல! அய்யோ பாவம் ரெயில்வே அதிகாரி தண்ணியில்ல காட்டுக்கு போற நேரம் வந்திருக்கும் போல... கடைசிவரைக்கும் ரெயில முதல் பிளாட்பாரத்துக்கு கொண்டு வர விடவில்லை அந்த அதிகாரி (அப்புறம் இரண்டாவது பிளாட்பாரத்துக்கே போயி சாது ரெயில் ஏறியதாய் கேள்வி!)

முடிவுரை (காமெடிக்காக):

பொறந்தாலும் லொல்லு சாரி லல்லுவுக்கு மச்சான பொறக்கனும், அட்லீஸ்ட் ஒரு அமைச்சர் சொந்தக்காரனாவது பொறக்கனும்!

கடுப்புரை:

என்னைக்குத்தான் மக்கள் இது போன்ற ஆட்களை MP ஆகவும் , மந்திரியாகவும் ஆக்குவதை நிருத்துவார்களோ! மக்களாய் பார்த்து திருத்தாவிட்டால் இவர்களை ஒழிக்க முடியாது!!!

அரசன் எவ்வழி, மக்கள் அவ்வழி

அரசியல் ஒரு வியாபாரமா? இன்றைய முதலீடு, நாளைய லாபம் என்கிற "ரேஞ்சில்" வளருது இந்திய அரசியல். இந்த பரிநாம வளர்ச்சி எப்படி தோன்றியது! யார் இதை வியாபாரம் ஆக்கியது?

சமீபத்தில் என் நண்பன் கார்த்திக்கின் திருமணத்துக்கு போனபோது ஒரு கலந்துரையாடலில் கிடைத்த மேட்டர் இது. நான், நண்பன் அருள், அருளின் தந்தை, வீரமணி, ராம், etc., ஹோட்டல் அறையிலிருந்து திருமண மண்டபத்துக்கு போகும் வழியில் Time Passக்கு பேச துவங்கினோம், மெதுவா அரசியல் பக்கம் திரும்பியது அப்போது வழக்கம் போல என் அதங்கமான வாரிசு அரசியல் பத்தி டாப்பிக்கு எடுத்து விட்டேன், அருளோட அப்பா ஒரு கேள்வியால் அடித்தருங்க ஒரு அடி நான் வாயடச்சு போயிட்டேன்!!! என்னிடம் ஒரு கேள்வி கேட்டார்? உங்க பிஸினசிலே உங்க மகன கொண்டுவர நெனைப்பீங்கல்ல? அது மாதிரிதான் இது என்றார். நான் வாயடச்சதுக்கு Reason அவர் தந்த அரசியலும், வியாபாரமும் ஒன்று என்ற விசயம், அறியாமை படித்தவர்கள் மத்தியுலுமா? என்ற ஷாக்கில் தான்.

நான் அறிந்த அரசியல், மக்கள் சேவை ஒன்றே கொள்கையாக கொண்டு, மக்களுக்கு நன்மைக்காக வாழ்வதே அரசியல்??!! கரெக்ட்டா? இது வியாபாராமா மாறி வருது...

மக்களும், அரசியல்வாதிகள் செய்யும் இந்த வாரிசு அரசியல் கூத்தை ஏற்றுக்கொள்ளும் மனோபாவத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். இதைத்தான் "யதா ராஜா...ததா ப்ரஜா" - அரசன் எவ்வழி, மக்கள் அவ்வழி என்று சொல்கிறார்களோ?

இதுக்கு என்ன தான் முடிவு?

நட்புக்கும் உண்டு அடைக்கும் தாள்

இந்த பதிவு நேற்று என்னை ரொம்பவே பாதிச்ச ஒரு விசயத்தை பகிர்ந்து கொள்ள தோன்றியதன் விழைவுதான்.
13 வருடங்களுக்கு முன்!
கல்லூரி நாட்களில் நட்பு ரீதியா நிறைய பேரிடம் பழகினாலும் ஒரு 6 பேரு ஒரு Groupபா தான் அலையுவோம்! நான், சிவஞானம், சிவ அமுதன், டானி, அசோக் & Iyer என்று அன்போடு அழைக்கப்படும் ஷிரிக்ஸ். தினம் ஒரு லொள்ளு, கலாட்ட, கல்லூரி முன் உள்ள டீ கடை அரட்டைகள் என பல கூத்துகள் Daily. நினைத்தால் திருப்பதி ட்ரிப், திடீர் கோனை நீர்விழ்ச்சி பயணம் என சுத்தி சுத்தி நாங்க உயிர் நன்பர்களா மாறிவிட்டோம்!
இப்ப என்ன அச்சு? எதுக்கு இந்த Build upன்னு தான நினைக்கறீங்க? நீங்க நெனைக்கறது சரிதான்! அதை பத்திதான் இப்ப சொல்லப்போறேன்.
நேற்று!
அமுதன் என் கைப்பேசிக்கு அழைத்து, டேய் ஒரு மேட்டர் தெரியுமா, நம்ம அசோக்கு ஆண் குழந்தை பொறந்திருக்குன்னு சொன்னான், ரொம்ப சந்தோஷம் டா!!! பரவால்ல மச்சி 10 வருஷம் குழந்தையில்லன்னு கஷ்டப்பட்டாலும் அதுக்கு ஒரு முடிவு வந்திருச்சு, Very good சொன்னேன். அடுத்து அமுதன் சொன்ன மேட்டர் "மச்சி அவனுக்கு கொழந்த பொறந்து ஒரு மாசம் ஆச்சாம!!!" அப்ப தான் எனக்கு பயங்கர ஷாக்!!! ஒரு மாசமாயியும் நமக்கு இந்த சந்தோஷ விசயம் சொல்ல படல, அமுதனுக்கே இந்த நட்புக்கு Link இல்லாத மூன்றாவது ஆள் தான் சொல்லியிருக்காரு... இதை USல இருக்கற இன்னொறு நணபனிடம் புலம்பினேன், அவன் "இதெல்லாம் இங்க சகஜம் மச்சி dont take it to your heart!!! busy scheduleல மறந்திருப்பான் டா! " நட்பே முக்கியம் என்று வாழ்ந்த எனக்கு இதை ஜீரனிக்க முடியவில்லை! நான் ஒரே கேள்வி மட்டும் கேட்டேன் busy scheduleனா குழந்தை பொறந்த மேட்டரை தந்தையிடம்(தந்தையை நண்பனாக தான் சொல்லுவார்கள் தோழனாக compare செய்வார்கள்!) சொல்ல மறந்திடுவானா?
என்னட இது நம்ம friends இப்படி பிரிஞ்சு போயிட்டோம்னு நினைக்க தோன்றியதன் விழைவே இந்த பதிவு!
நட்பு ஒரு அலசல்:
நட்புக்கு இரண்டு முகம் இருக்கும் முடிவுக்கு வந்திட்டேன். நட்பு க.மு, நட்பு க.பி. ரொம்ப யோசிக்க வேண்டாம்... கல்யாணத்துக்கு முன், கல்யாணத்துக்கு பின் அது தான் அந்த க.மு, க.பி.
நட்பு க.மு:
முடிஞ்சா தினம் சந்திப்பது or atleast phone , கண்டிப்ப வாரம் ஒரு முறை மீட்டிங், weekend சினிமா, ஊர் சுத்தரது, Summer உல்லாச பயணங்கள் (ஊட்டி, கொடைகானல்,..) , ஜாலி வாழ்க்கை! இதெல்லாம் நடந்தது க.முவில்.
எங்க டீம்ல முதல் கல்யாணம் அசோக்கு நடந்தது ! இரண்டாவதா எனக்கு!! May be we two are 2-3 years elders to other friends. மற்றவர்களுக்கு 4-5 வருசங்களுக்கு அப்புறம் தான் கல்யாணம் நடந்தது. இதில் என் கிட்ட கேட்டு தான் கல்யாண பெண்ணை finalize செய்த நண்பர்களும் அடங்கும். சினிமா டைப்ல பொக்கே தர Idea சொல்லரது, பெண்ணை finalize செய்ய அவள் படிக்கும் Computer Institute முன்பாக வெட் செய்து பெண் பார்த்து ஓ.கே சொன்னதுன்னு...
சிவா USல இருந்து வந்த நாங்க எல்லாவரும் (என்ன எல்லாவரும் நான் & அமுதன் மட்டும் தான் இந்தியாவில் குப்பை கொட்டரோம்) வேலைக்கு Ta! Ta! சொல்லிவிட்டு fulla சிவா கூட ஊர் சுத்தர வேலையை மெயின் தொழிலா மாத்திக்குவோம்! சிவா அம்மா எங்க கிட்ட கெஞ்சுவாங்க, "என் பையனை ரெண்டு நாலுக்கு எனக்கு தாங்கனு"
ஒரு கொண்டாட்மா இருந்த நட்பு அது, அது அந்த காலம்!!!
நட்பு க.பி:

இப்போ சிவா சென்னை வந்த விமானதளத்தில் ஒரு 5 நிமிடம் பின்னர் அவன் சென்னையில் உள்ள 25 - 30 நாட்களில் சுமார் 1-2 மணி நேரம் தான் நாங்கள் சந்திக்க முடிகிறது.

இது என்ன இந்தியாவில் குப்பை கொட்டர நானும் அமுதனுமே ஒரு மாதத்க்கு ஒரு முறை கூட போன் பேசறதில்ல 4-5 மாசத்துக்கு ஒரு முறை தான் சந்திக்குறோம் அதுவும் ஒரு மணி நேர கால அவகாசம் தான் இருக்கும். எதாவது நிகழ்ச்சிகளில் (குழந்தைகளின் பிறந்த நாள், கல்லூரி நண்பர்களின் கல்யாணம் இப்படி எதாவது சிக்கனா ஒரு 4 -5 மணி நேரம் ஒன்னா இருக்க முடியுது)

கடந்தமுறை(சுமார் 1.5 Yrs) அசோக் இங்கு வந்த போது அவன் மனைவி வேலை நிமித்தமா அவன் கூட வரல அப்ப தான் சுமார் 4-5 நாள் சந்திச்சோம், சுமார் 3-4 மணி நேரம் எங்களோட இருந்தான்!

இன்று:

என்னடா இவ்வளவு தான் நட்பா? இதையா பெரியா விசயமா நெனச்சோமா? ஒன்றும் புரியவில்லை!!! நான் பெற்றோர்க்கு இணையாக நண்பர்களை நினைத்தன் விழைவே இந்த ஆத்ங்கமா?

பிசிராந்தையாரின் நட்பும் , திருவள்ளுவனின் நட்பியலில் படித்து, நட்பு இன்றியாத ஒன்று என்று நினைத்திருந்த எனக்கு இது பேரிடி!

"முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு."

Anyway நட்புக்கும் உண்டோ அடைக்கும் தாள்? என்று கேட்பார்கள். என் அலசலின் முடிவு நட்புக்கும் உண்டு அடைக்கும் தாள்! அந்த தாள் தான் திருமணம்!

(பி.கு: இந்த பதிவில் வரும் நட்பு க.மு, க.பி ஆணுக்கு பெண்ணுக்கும் பொதுப்படையாக எழுதப்பட்டது. பெண் சுதந்திர போராளிகள் கவலைப்பட வேண்டாம். எனக்கும் உண்டு பெண் சுதந்திர வேண்டும் என்ற உணர்வு :))

பிச்சை பாத்திரத்தில் கையிட்ட அரசு!

ஒரு நல்லரசு எதை செய்யக்கூடாதோ அதை செய்வதை தொழிலாக ஆக்கி கொண்டுள்ளது நம் இந்திய அரசு! நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களை மிகவும் பாதிக்கும் பனிகளை செவ்வனே செய்து மார்தட்டி கொள்ளும் "Middle Class Budget " அரசு!!! காமெடிக்கு ஒரு அளவே இல்லையா??

மிக சிறந்த உதாரணத்துக்கு பெட்ரோல் விலையேற்றத்தை கூறலாம். நேற்று முன் தினம் சுமார் ரூ4 விலையேற்றி ஒரு லிட்டர்க்கு ரூ 52 என்று ஏற்றியாது. அன்று இரவு 12 மணி முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது, உடனே எடு வண்டியை என்று படை எடுத்தேன் பெட்ரோல் நிலையத்துக்கு. அங்கு சென்றதும் மக்கள் வெள்ளம் தங்கள் இருசக்கர வகணங்களுடன. அய்யோ பாவம், இந்த 4 ரூபாயை மிச்ச படுத்த வரிசையில் காத்திருக்கிறார்கள் நம் மக்களின் வாழ்க்கை நிலை எந்த அளவுக்கு கீழே தள்ளப்பட்டுள்ளது என்று நினைக்கும் போது மிகவும் வருத்தப்பட்டேன், நானும் அந்த 4 X 5 = 20 ரூபாயை மிச்சப்படுத்த தான் வரிசையில் காத்திருந்தேன்!!! நாம் கஷ்டப்பட்டு உண்டாக்கும் பணத்தை எவ்வளவு எளிதாக தட்டி செல்கிறது இந்த அரசு! இதைத்தான் பிச்சை பாத்திரத்தில் கையிடுவது என்பார்களோ!

வேறு வழி இல்லை, விதி என்று நினைப்பதை விட்டு விட்டு நாம் இந்த பகல் கொள்ளைக்கு ஒரு முடிவு கொண்டுவர வேண்டும். காங்கரஸின் இந்த நாடகம் வெளிச்சத்துக்கு வர வேண்டும். வழக்கம் போல் கம்யூனிஸ்டுகளின் வெறும் எதிர்ப்பு நாடகம் துடங்கிவிட்டனர். அவர்கள் மீண்டும் மக்களை திரட்டி போராட போகிறோம் என்ற கதைவிடுகிறார்கள். ஐயா உங்கள் போராட்ட நாடகம் கடந்த இரண்டு வருடங்களில் பல முறை பார்த்துவிட்டோம்!!! ரூ 33.60 இருந்த பெட்ரோல் இன்று ரூ52 ஆகியிருக்கிறது கடந்த இரண்டு ஆண்டுகளில் இதற்கு கம்யூனிஸ்டுகளின் வெறும் எதிர்ப்பை மட்டும் தெரிவிக்கிறார்கள், ஒரு முறை கூட நல்ல முடிவு எட்டப்படவில்லை. எதிர் கட்சிகளான பா.ஜ.க வும் பெரிய எதிர்ப்பை காட்டுவதாக தோன்றவில்லை!

இனி நம் தான் நேரடியாக களத்தில் இறங்க வேண்டும். ஆகவே நாம் முடிவெடுப்போம்! உங்கள் கருத்தை பின்னூட்டங்களாக எழுதவும்.

விழித்திடு ! எதிர்த்திடு ! உணர்த்திடு அரசுக்கு!!!

பெட்ரோல் இடி விழுந்தது!!!

நன்பா!

அரசு நமக்கு பெட்ரோல் வெடி இல்லை இடியை நம் தலையில் போட்டது வெற்றிகரமாக. இன்று இரவுமுதல் பெட்ரோல் விலை ரூ 4 கும் , டீசல் விலை சுமார் ரூ 2 ஏற்றபடுகிறது.

இனி அனைத்து அத்தியாவச பொருட்களில் விலையேற்றம் தவிற்க்க முடியாத ஒன்றாகிவிடும்.

நான் வாழ இந்தியாவில் இடமில்லயா?

மக்களே சிந்திப்பீர்! போராட துடங்குவோம்!!

ஆசியாவிலேயே நாம் தான் மிக அதிக விலை கொடுத்து பெட்ரோல் வாங்குகிறோம்!!! ஏன்னென்று அறிவதற்கும், என் முந்தைய பதிப்பான "பெட்ரோல் விலையும்... மானியம் என்னும் மாயையும்" படிக்கவும்

பெட்ரோல் விலையும்... மானியம் என்னும் மாயையும்

ஒவ்வொரு இந்தியனும் தெரிந்து கொள்ள வேண்டிய, பெட்ரோல் விலை பற்றிய விஷயங்களை இங்கே பகிர்ந்துக்கொள்ள ஆசைப்படுகிறேன். அப்படி தெரிந்துகொள்ளவேண்டியது மிக அவசியமும் ஆகிவருகிற நேரமிது. ஏனெனில், ஆசியாவிலேயே நாம் தான் மிக அதிக விலை கொடுத்து பெட்ரோல் வாங்குகிறோம். உலக அளவில் இதில் நாம் இரண்டாம் இடம்!
இந்த எரிபொருள் விலை உயர்வு எங்கெல்லாம் நடுத்தர மக்களை பாதிக்கும்:
1. காய்கறி, அரிசி, பருப்பு உள்ளிட்ட அனைத்து அன்றாட தேவையான பொருட்களில் விலையும் இந்த எரிபொருள் விலைப் பொருத்தே அமைகிறது. ஏனெனில், இந்த சரக்குகளின் போக்குவரத்துக்கு எரிபொருள் இன்றியமைதாத தேவையாகிவிட்டது.
2. நடுத்தர மக்களின் போக்குவரத்து தேவைகளான ரெயில், பேருந்து, ஆட்டோ என அனைத்தின் சேவை கட்டணங்களும் இந்த எரிபொருள் விலைப் பொருத்தே அமைகிறது.

ஏன் இந்த நிலை? என்ன தான் உண்மை? இந்த பெட்ரோல் விலையின் சூட்சமம் தான் என்ன? சில இனைய வலையில் இருந்து கிடைத்த சில புள்ளி விவரங்களை இங்கு பார்ப்போம்...

நமது அரசு மற்றும் அரசு அனுமதி பெற்ற தனியார் எண்ணை கிணறுகள் மூலம் 35 முதல் 40 சதவிகிதம் வரை பெட்ரோலிய வளத்தில் தன்னிறைவு பெறுகிற நாடு நம்முடையது! உங்களால் நம்பமுடிகிறதா? எல்லாம் படித்துப் பார்த்து நாம் ஒரு முடிவுக்கு வருவோம்...

1. ஒரு பேரல் இறக்குமதி செய்யபடும் கச்சா எண்ணை விலை $ 64.84 ( ஒரு பேரல் = 160 லிட்டர்.) எனில், இந்திய ரூ 2918/-

2. ஒரு பேரலில் சராசரியாக 80 முதல் 90 லிட்டர் பெட்ரோல் கிடைக்கும். அது மட்டும் அல்லாது, வெறு சில விலை உயர்ந்த உற்பத்தி கழிவுகளும் கிடைக்கிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் சுமார் ரூ 47.49 (83 கிரேடு) , 48.89 (91 கிரேடு) என பல விலையில் விற்கப்படுகிறது.

3. உற்பத்தி கழிவுகள்: மண்ணெண்ணை, டீசல் , பென்சீன், பெட்ரோலியம் wax , Praffin, எல்லா வகையான Lubricants, நீங்கள் உங்கள் இருசக்கர வகனங்குளுக்கு உபயோகிக்கும் 2T, 3T எண்ணை வகைகள், தார் மற்றும் பல. பெட்ரோல் உற்பத்தியில் கிடைக்கிற கழிவுகளும் விலை உயர்தவைகளே! இவை எல்லாவற்றுக்கும் மேல், பெட்ரோல் உற்பத்தியில் கிடைக்கும் மற்றும் ஒரு கழிவு LPG எனபடும் எரிவாயு.

4. பென்சீன் விமானதின் எரிவாயு. இது லிட்டருக்கு சுமார் ரூ 200 வரை விற்கப்படுவதாக கூறப்படுகிறது.

5. டீசல் எரிவாயு லிட்டருக்கு சுமார் ரூ 35 வரை விற்கப்படுகிறது.

6. மண்ணெண்ணை லிட்டருக்கு சுமார் ரூ 25 முதல் ரூ 35 வரை விற்கப்படுகிறது.

7. Prafin - இது ஒரு கிலோ சுமார் ரூ 250 முதல் 300 வரை விற்கப்படுகிறது.

8. 2T, 3T Oil - இது ஒரு லிட்டர் சுமார் ரூ 120 முதல் 150 வரை விற்கப்படுகிறது.

9. தொழிற்சாலைகளில் உபயோகிக்கபடும் Lubricants - இது ஒரு லிட்டர் சுமார் ரூ 200 முதல் 400 வரை தரவாரியாக விற்கப்படுகிறது.

10. தார் - இந்த கழிவும் நல்ல விலைக்கு விற்கப்படுகிறது. இன்னும் பல பொருட்கள் கச்சா எண்ணையிலிருந்து தயாரிக்கப்படுகிறது.

இதில் உண்மையில் வீணாய் போகும் வாயுதான் நம் வீடுகளில் சமையலுக்கு பயன்படுத்தபடும் LPG. இது பல வகையாக பிரிக்கப்பட்டு, தொழிற்சாலைகள் மற்றும் உணவகம் போன்ற வியாபார உபயோகத்துக்கு ஒரு விலையும் ( ஒரு கிலோ ரூ 45 -60 ) , வீடுகளில் சமையலுக்கு ஒரு விலையுமாக (சுமார் ஒரு கிலோ ரூ 20 -25க்கு) விற்க்கபடுகிறது.

சில Encyclopedia வலையிலிருந்து கிட்டிய தகவல் படி கச்சா எண்ணையில் சுமார் 88 சதவீதம் எரிவாயுவாக, மீதம் உள்ள 12 சதவீதம் Lubricating oil, Paraffin wax, Plastic, Tar என பல உபரி பொருட்களாக தயாரிக்கப்படுகிறது. இதில் ஒரு கூத்து என்னவென்றால் 160 லிட்டர் கச்சா எண்ணை சுமார் 170 லிட்டர் பெட்ரோலியப் பொருட்களை நமக்கு தருகிறது (நன்றி: American Petroleum Institute)

இப்படி, கச்சா எண்ணை ஒரு சொட்டு கூட வீணாக்கப்படாமல் பணமாக்கப்படும்போது, எண்ணை நிறுவனங்கள் எப்படி நஷ்டத்தில் இயங்கமுடியும் என்று எனக்கு வரும் அதே சந்தேகம் உங்களுக்கும் வரலாம். சில இணைய தளங்கள் மூலம் கிடைத்த தகவல்படி, எனது அறிவுக்கு எட்டியவரை...

இதோ சில காரணங்கள்:
  1. இந்திய அரசாங்கம், இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணைக்கு 63% (23 per cent + Rs 7.50 per litre) வரி விதிக்கிறது. அதாவது, ஒரு பேரலின் விலை ரூ 2918 எனில், அதற்கு நமது அரசாங்கம் விதிக்கும் இறக்குமதி வரி ரூ 1839. ஆக இறக்குமதிக்குப்பின் ஒரு பேரல் கச்சா எண்ணையின் விலை ரூ 4757! அத்துடன் விடவில்லை.
  2. எண்ணை நிறுவனம் உற்பத்தி செய்த பெட்ரோல் மற்றும் அதன் கழிவுகளுக்கு, மத்திய அரசு விற்பனை வரி வேறு விதிக்கிறது. அதுவும் சாதரன வரி அல்ல. 25% முதல் 30% வரை! அத்தோடு விட்டதா என்றாலும் இல்லை!
  3. இந்த பெட்ரோல் மாநிலங்களுக்கு செல்லும் போது, அங்கு மாநில அரசு 20% முதல் 30% வரை விற்பனை வரி விதிக்கும். ஆக 100%-க்கு மேல் இறக்குமதி மற்றும் விற்பனை வரிகள் விதிப்பப்படுகின்றன.
  4. எண்ணை நிறுவனங்கள் படு ஆடம்பர வாழ்க்கை வாழ்கின்றன. உதாரணதுக்கு - IOCயில் ஒரு கார் ஓட்டுனர் சுமார் ரூ 20,000 சம்பளமாக பெறுகிறார். நம்ம ஊரு கால் Taxi ஓட்டுனர் ரூ 2,000 சம்பளதுக்கு படாத பாடுபடுகிறான். ஒரு IT நிறுவனதின் செலவுகளை மிஞ்சுகிறது இந்த எண்ணை நிறுவனங்களின் செலவுகள்.

உண்மை இப்படி இருக்க, அரசுகள் நமக்கு மானியம் வழங்குவதாகவும், அதனால் அரசுக்கு பளு கூடுவதாகவும் கூசாமல் கூறுகிறார்கள்!

என் அறிவுக்கு எட்டிய வரை, என் கணக்கும் சரி என்றால், ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ 20 முதல் 22 வரை ஆகலாம். ஏனென்றால், அமெரிக்காவில் மானியங்கள் கிடையாது, அங்கெல்லாம் எண்ணை நிறுவனங்களை அரசு நடத்தவில்லை, தனியார் நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்க மாட்டார்கள். அவர்களால் ரூ 21 க்கு ஒரு லிட்டட் பெட்ரோல் வழங்க முடியும் என்றால், நிச்சயம் நாமும் ஏறத்தாழா அந்த விலைக்கே தயாரிக்க முடியும் என்பது என் கூற்று.

இந்த வலைபதிப்புக்காக நான் பல இணையங்களை வலை வீசி தேடினேன், சில சுறாகள் சிக்கின. அதில் ஒன்று OPEC.ORG (Organization of the Petroleum Exporting Countries) கச்சா எண்ணை ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு.

அந்த வலையத்தை அலசிய போது, சில புள்ளி விவரம் என்னை வியக்க செய்தது! அதில் ஒரு பகுதி Who gets what from imported oil? இறக்குமதி கச்சா எண்ணையால் யாருக்கு லாபம்?

அவர்களுடைய ஆய்வு துறை (Research Division, OPEC, Vienna, Austria, 2001) செய்த ஆய்வில், கடந்த 1996 முதல் 2001 வரை உள்ள புள்ளிவிவரம்:

1. ஏற்றுமதி கச்சா எண்ணையால் OPEC நாடுகள் சுமார் $850 மில்லியன் சம்பதிக்கும் வேலையில் இறக்குமதி செய்யும் நாடுகள் (அரசுகள்) சுமார் $1.3 ட்ரில்லியன் (Trillion) (G7 நாடுகள் மட்டும்) வரியின் மூலம் சம்பாதிக்கிறது, OPEC நாடுகள் தங்கள் எண்ணை வளத்தை விற்று வருவாய் ஈட்டும் நேரத்தில் இறக்குமதி செய்யும் அரசுகள் வரியாக இருமடங்கு சம்பாதித்து விடுகிறது. இதில் இந்திய அரசும் சளைத்தவர்கள் அல்ல! இந்திய அரசும் UKக்கு இணையாக வரி விதிக்கிறது! இது என்ன கூத்து? இது பகல் கொள்ளையா? இதை படித்தபோது எனக்கு ஒரு பழமொழி ஞபகத்துக்கு வருது, சுண்டக்கா கால் பணம், சுமை கூலி முக்கால் பணம் என்பார்களே இது தானா அது? அட சுமை கூலினு கூட சொல்ல முடியாது இந்த வரியை, சுமை கூலி உழைபவனுக்கு கொடுக்கும் காசு. இந்த காமெடிக்கு ஒரு அளவு வேண்டாமா?

2. G7 நாடுகளில் பெட்ரோல் விலை புள்ளி விவரங்கள்:

அமெரிக்கா - ரூ 21

கனடா - ரூ 21.6

ஜப்பான் - ரூ 44.5

இங்லாந்து - ரூ 53.55

என்று நீள்கிறது, இதில் வரியின் பங்கு தான் அதிகம். மேலே உள்ள படத்தில் அதன் Break-up உள்ளது பாருங்கள்! நீல நிறம் தான் கச்சா எண்ணை விலை, மஞ்சள் நிறம் கச்சா எண்ணையை பெட்ரோல் எடுப்பதற்காகும் செலவு, சிவப்பு தான் நம் அரசு நம்மேல் சுமத்தும் வரி!!!! இதில் இந்திய பெட்ரோல் விலை இங்லாந்தின் விலைக்கு நிகராக இருக்கும்.

3. மேலும் OPEC வலையில் ஒரு தகவல்:

" A Taxing Business.... The real burden on the consumer is taxation, and the real profiteers are the governments of the consuming countries. "

கச்சா எண்ணை ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கு கிடைக்கும் லாபத்தை விட நுகர்வோரிடம் அரசுகள் வசூலிக்கும் வரியே பெட்ரோலிய பொருட்களின் ஆகாய விலைக்கு காரணம் என்கிறது கச்சா எண்ணை ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு.

நானும் என் பங்குக்கு சில பெட்ரோல் விலை புள்ளி விவரங்களை என் வெளிநாட்டு நண்பர்களிடம் கேட்டு பெற்றேன்:

பெட்ரோல் விலை அடைப்பில் அதன் கிரேடுகளும்:

அமெரிக்கா - ரூ 22 (87 கிரேடு)

பர்மா (மியான்மர்) - ரூ 28.5 (83 கிரேடு)

மலேசியா - ரூ 23 (83 கிரேடு)

சிங்கப்பூர் - ரூ 41 (92 கிரேடு)

ஆஸ்ட்ரெலியா - ரூ 25

பாகிஸ்தான் - ரூ 27

ஒரு விலை கூட இந்தியாவில் விற்கப்படும் விலைக்கு பக்கம் கூட வரவில்லை... ஏன் இந்த கூத்து? ஒருவேளை நாம் இன்னும் இங்லாந்தின் வரி கோட்பாடுகளை பின் பற்றுகிறோமோ?

இந்த புள்ளிவிவரங்கள் நம் நாடு பத்திரிக்கைகளுக்கு தெரியவில்லையா? ஏன் அவர்கள் மக்களுக்கு அதை கொண்டு செல்வதில்லை? என்ன தான் நடக்கிறது? இதயை தடுப்பது யார்?

இது ஒரு புறம் இருக்க, திரு. மணிசங்கர் போன்ற மந்திரிகள் சொல்லும் சுடு சொற்கள்,

" பெண்கள் சினிமா போவதையும், சேலை வாங்குவதையும் குறைத்துக்கொண்டால் காஸ், பெட்ரோல் போன்றவை எளிதில் வாங்க முடியும்"

நாம சினிமா போவதும், ஆடைகள் வாங்குவதும் கூட இந்த கேடுகெட்ட அரசியல்வாதிகளில் கண்ணை பறிக்கிறது போலும்? இவரால் இதை தன் மனைவியிடம் சொல்லுவாரா? இவர்கள் ஏன் நம் பணத்தில் உளாவரும் குளிர் சாதன வசதி படைத்த கார்களில் செல்வதை நிறுத்தலாமே? நம் பணத்தில் விமான பயணத்தை நிறுத்தலாமே? வெட்டி பேச்சு நடத்துவதை நிறுத்தலாமே?

இத்தனைக்கும் மேலாக, அவர்கள் சொல்லும் மானியம் என்னும் வார்த்தையை கேட்க்கும்போது. நம் தலையில் பன்முனை வரி சுமத்தி,அதில் பிச்சையிடுவதுபோல் கதைவிடுவதை நாம் உணரவேண்டும். நமக்காக பேச நாம் தேர்ந்தெடுத்த சட்டமன்ற உறுப்பினரும் வரமாட்டார், பாராளமன்ற உறுப்பினரும் வரமாட்டார். ஏனென்றால் அவர்கள் காசு கொடுத்து பெட்ரோல் வாங்கி இருக்க மாட்டார்கள்.

நம்முடைய கேள்விகளுக்கு இந்த அரசியல்வாதிகள் பதில் சொல்ல வேண்டிய காலம் மிக விரைவில் வரும், நம் ஆதங்கம் கரையை ஒரு நாள் கடக்கும்.

இனியும் விலை கூடினால்,மாட்டு வண்டிகள் வீதிக்கு வரகூடும், அது மட்டும் போதாது, மக்களும் வரவேண்டும், நேபாளம் கண்டது, இந்தியாவும் காணட்டும்.

(பி.கு: இந்த புள்ளி விவரங்கள் அனைத்தும் பல வலைப்பதிப்புகளிலிருந்து எடுக்கப்பட்டு இந்திய மக்களுக்கு ஒரு வலையில் தாருவதற்கான முயற்சியே. Thanks to OPEC.org, wikipedia.org, home.att.net/~cat6a, adventuresinenergy.com, api-ec.api.org, etc.,)